Saturday, 8 August 2020

விடியும் வரை நம்பிக்கையோடிருப்போம்! - பா. தியோபின் சே.ச.,

 விடியும் வரை நம்பிக்கையோடிருப்போம்!


மாற்றத்தின் காலமா! காலத்தின் மாற்றமா!

வரலாற்றைப் புறட்டுகிறது இந்த கொரோனா காலம்.


பொருளாதாரத்தை முன்னிலைப்படுத்திய இவ்வையகம்

ஆதாரமே அறியாத வைரஸின் பிடியில் சிக்கியது.


கதவு இல்லாத வீடும் அடைந்திருக்கிறது

ஏழ்மையும் வறுமையும் அங்கே தானே குடியிருக்கிறது.


பொருள்தேடி அவன் வெளியே நடக்க

பணத்தோடு பிணமாக ஆர்வலர்கள் கூட்டிச்சேர்க்க


பசி பட்டினிக்கு குடிதண்ணீர் வயிற்றை ரொப்ப

குடிமகனின் குடித்தனம் வீடு விட்டு நாட்டைக் காக்க


பொருளாதாரமா? பொறுமை தான் ஆயுதமா? என்ற போராட்டத்தில்

கத்தியின்றி உலகப்போர் ஒன்று வெகுநாள் தொடர்கிறது.


சமயக்கடவுள்கள் இதைக் காணமற் உண்டோ?

மனிதனின் இறப்பு உருண்டோடுது அன்றோ!


சாஸ்திரமும் சம்பிரதாயமும் சொன்னதெல்லாம் எங்கே?

இத்தரித்திரம் வைரஸோடு போகட்டும் இன்றே!


சமூகவிலகலும் தூரப்போகும் தீண்டாமை முன்னே

மனிதத்தை கூறுபோட்டதும் சாதியடா கண்ணே!


கோவிட்’19 மனித உயிரைத் தானே பறிக்கிறது

சாதிய சிந்தனைக்கும், வன்முறைக்கும் இன்றளவும் அழிவில்லையே!


சமூகவிலகல் மனித உறவை மட்டுமே முடக்குகிறது

டிஜிட்டல் உலகம் இந்நாளில் மனிதனையே கவிழ்த்துகிறது.


மீனவர் வலையில் அகப்படும் மீன்களையும் சற்று எண்ணிவிடலாம்

சமூக வலைதளங்களில் சிக்குகின்ற இளையோர்களோ எண்ணிலடங்கா!


சாதாரண நாளில் ஒருநாள் வேலை அமையாவிடில்

அன்றைய ஒருவேளை உணவு கூட பலருக்கு அசாதாரணமே.


ஒருபுறம், கொரோனா பிடியினால் ஆயிரமாயிரம் பேர் பலி

மறுபுறம், வறுமை, சாதி-நிற வெறியினால் கணக்கற்றோர் காலி.


20-20க்காக பலநாள் கண்ட கனவுகள் நனவாகுமா? - அல்லது 

20-20 ஆம் ஆண்டே கனவாகிவிடுமா?


கி.மு. - கி.பி. வரலாற்றுப்பிரிவினை பொ.மு. - பொ.பி. என்று திரிந்தது

இத்திரிந்த காலப்பிரிவினை இப்போது கொ.மு. - கொ.பி. என்றாகிவிடுமோ?


எப்போது இந்த அழிவிற்கு முற்றுப்புள்ளி கிடைக்கும்?

எப்போது தன்னம்பிக்கை நம் கைகோர்க்கும்?


எவரிடமிருந்தும் பதிலில்லை, யாரிடமும் தெளிவில்லை!

எந்த நேரமும் உறுதியில்லை, விடியலுக்கான பொறுமையில்லை.


இதுவும் கடந்து போகும் என்னும் ஆறுதல் மொழிகளோ

நம்மைக் கடந்து வெகு தொலைவில் சென்றுவிட்டது.


இருப்பினும்,

இருள் இல்லையேல் வெளிச்சம் இல்லை

தொடக்கம் இல்லையேல் முடிவு இல்லை

தடுமாற்றம் இல்லையேல் முன்னேற்றம் இல்லை

எதிர்நோக்கு இல்லையேல் எதிர்காலம் இல்லை

நேர்மறை இல்லையேல் புதுப்பாதை இல்லை

வீழ்ச்சி இல்லையேல் எழுச்சி இல்லை

நம்பிக்கை இல்லையேல் வாழ்வே இல்லை.

கொரோனா யுத்தத்தை தனித்து நின்று போராடுவோம்.

விழிப்போடு முனைப்புடன் எதிர்கொள்வோம்.

ஒரு கதவு அடைய பல கதவுகள் உடைபடும்!

மாற்றுச் சிந்தனையை உருவாக்குவோம்.

புதுவழியிலே புத்துணர்ச்சியோடு தடம் பதிப்போம்.

தனித்துவத்தை நிலைநாட்டுவோம்!


பா. தியோபின் மைக்கேல் சே.ச.,


No comments:

Post a Comment